Wednesday, March 18, 2020

ரன்னிங் டைரி -82

18-03-2020 08:15
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் நினைவில் வந்தது இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் தான். நேற்று தான் அதை முழுவதும் படித்தேன். என்ன நடக்கும் என்று பார்ப்போம் என்று எண்ணிக் கொண்டேன். திடீரென்று சாரு நிவேதா ஞாபகம் வந்ததது. என்னைப் பொறுத்தவரை அவர் ஒரு சிறந்த கட்டுரையாளர். அவரைப் போல தைரியமாக எழுதுபவர்கள் வெகு சிலரே. அதற்காக மற்றொரு எழுத்தாளரை குறை சொல்வது சரியல்ல. விமர்சனம் செய்வது வேறு ஒருவரின் புகழைப் பற்றி பொறாமைப் படுவது வேறு.பெருமாள் முருகனின் எழுத்து வேறு வகையானது. சாரு நிவேதா இப்படி செய்வதற்கு பதிலாய் இன்னும் எழுதினால் நன்றாக இருக்கும் என்று எண்ணிக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Tuesday, March 17, 2020

ரன்னிங் டைரி -81

15-03-2020 05:05
வீட்டிலிருந்து கிழக்கு கடற்கரை அங்கிருந்து கேலாங் மார்க்கெட் வரை

சாலையில் ஒருவரும் இல்லை. பெரும் அமைதி. எனக்கு திடீரென்று பயம் வந்தது. பல தடவை இந்நேரத்தில் ஓடி இருக்கிறேன் ஆனால் இன்று ஏதோ ஒன்று வித்தியாசமாக தெரிந்தது. கவனத்தை மூச்சில் நிறுத்தி ஓட ஆரம்பித்தேன். மிகவும் வேகமாக ஓடினேன். எதுவும் மனதில் ஓடவில்லை. கிழக்கு கடற்கரையை அடைந்தேன். சற்று நேரம் கடல் அருகில் சென்று நின்றுவிட்டு கரையில் சில நிமிடங்கள் நடந்தேன். என்ன ஒரு புத்துணர்வு. கடல் என்றும் என்னை ஆச்சிரியப்படுத்த தவறியதில்லை. இன்றும் அப்படியே அரை நிலவில் கடல் மேலும் அழகாக இருந்தது. இந்த வாரமும் சர்ச்சில் பூசை இல்லை என்று தோன்றியவுடன் மீண்டும் ஓட ஆரம்பித்தேன். நேராக மார்கெட்டிற்கு ஓடினேன். மனதில் என்னென்ன வாங்க வேண்டுமென்று எண்ணிக் கொண்டேன். கனவாய் வாங்கவா வேண்டாமா என்ற கேள்வியுடன் மார்க்கெட்டை அடைந்தேன்.

Monday, March 16, 2020

ரன்னிங் டைரி -80

13-03-2020 08:17
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

சரியான வெய்யில். ஓடியே சில நிமிடத்திலேயே வியர்வையில் குளித்தேன். பாதியிலேயே நடக்க ஆரம்பித்தேன். மனதில் எதுவுமே எண்ணவில்லை. வியர்த்து விறுவிறுத்து அலுவலகத்தை அடைந்தேன்.

Wednesday, March 11, 2020

ரன்னிங் டைரி -79

11-03-2020 08:12
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

ஓட ஆரம்பித்தவுடன் இன்று நடக்கவிருக்கும் வாடிக்கையாளர் சந்திப்புதான் மனதில் தோன்றியது. இந்த வாடிக்கியாளரை எனக்கு பத்து வருடங்களுக்குப் மேல் தெரியும். நான் என்ன பேச வேண்டும் என்பதை யோசித்துக் கொண்டே ஓடினேன். அவர் என்ன கேட்பார் என்றும் எனக்குத் தெரியும். கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுக்கு நாங்கள் செய்த அனைத்து வேலைகளின் பட்டியல் என்னிடம் தயாராக இருக்கிறது அதனால் எனக்கு எந்த பதட்டமும் இல்லை. இந்த பாடல்  வந்தவுடன் என்னை அறியாமல் என் ஓட்டத்தில் ஒரு துள்ளல் வந்தது.  மற்றவர்கள் என்னை சற்று வித்தியாசமாக பார்த்தார்கள். நான் பாடலை ரசித்துக் கொண்டு ஓடினேன். மீண்டும் இரண்டு முறை கேட்டுக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Monday, March 9, 2020

வேனல் - கலாப்ரியா


இது கலாப்ரியாவின் முதல் நாவல் என்றால் நம்ப முடியாது. மிக அழகாக ஒரு நாவலை எழுதியுள்ளார் . ஒரு குடும்பத்தின் மூன்று தலைமுறை கதையை சொல்கிறது வேனல். பிரதான கதாபாத்திரங்கள் அனைத்தும் பெண்களே. இது அப்பெண்களின் கண்ணீர் நிறைந்த கதை.இந்த நாவல்  ஒரு காலகட்டத்தின் பிரதிபலிப்பு. பெரியாரின் பேச்சு  திமுகாவின் வளர்ச்சி மற்றும் திரைப்படங்களின் தாக்கம் என்று அந்த காலகட்டத்தின் அனைத்தும்  இக்கதையில் வருகிறது.

பல அடுக்கு கதைகளை கொண்டது இந்த நாவல். கொட்டகை வீடு தான் இக்கதையின்  மய்யம் . இந்த வீட்டின் மனிதர்கள் மட்டும் அல்ல வீடும்தான் சூழ்நிலையால் மாறுகிறது . வீட்டின் பெரியார் சிவசுப்பிரமணியன் முன்னாள் அரசு அதிகாரி பெரிய பணக்காரர் .வீட்டம்மா சிவஞானம் . இவர்களுக்கு ஒரே மகன் திரவியம். அவனது மனைவி மீனா .அவர்களுக்கு ஒரு பெண்குழந்தை மற்றும் இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறது. பெரியவரின் தம்பி தொய்வு அவனின் மனைவி சாந்தா. திரவியம் எதையுமே பெரிதாக செய்பவன். செலவைப் பற்றி யோசிக்கவே மாட்டான். அவளது மனைவியை சரியாக கவனிக்காதவன். அவனுக்கு மற்றொரு பெண்ணுடன் தொடர்பும் உள்ளது.

தொய்வு மற்றும் சாந்தாவின் கதைதான் இந்நாவலின் கதாப்பாத்திரங்களை ஒன்றோடொன்று இணைக்கிறது. இருவரும் நாடகத்தில் ஒன்றாக நடித்தவர்கள். சாந்தா ஒரு மலையாளியாக இருந்தாலும் அவளை விரும்பி தொய்வு திருமணம் செய்கிறான்.சாந்தா எப்படி இருப்பாள் என்று ஏங்கும்  அளவுக்கு அவளின் அழகை சிலாய்த்து எழுதியுள்ளார் கலாப்ரியா. அவர்கள் இருவருக்கும் நடக்கும் சிறு சிறு நிகழ்வுகள் கவிதைகள் போல எழுதப்பட்டுள்ளது.  சாந்தாவை  பார்க்கும் அனைத்து ஆண்களும் அவள் மேல்  மோகம் கொள்கிறார்கள். அதற்கு திரவியமும் அவன் மருமகனும் விதிவிலக்கல்ல. ஆணின் காமத்திற்கு எல்லையே இல்லை போல. சாந்தா இந்த மாதிரி பார்வைக்கு பழக்கமானாலும் அது அவளை வருத்தப்படத்தான் செய்கிறது.

மற்றொரு குறிப்பிடத்தக்க குடும்பம் வெங்கு அண்ணாச்சி உமையாள் மற்றும் அவர்களின் மகன். இக்குடும்பம் கொட்டகை வீட்டிற்கு எதிர்மாறானது.இங்கு  உமையாளுக்கு அனைத்து சுதந்திரமும் உள்ளது. அவள் நினைத்தத்தைச் செய்கிறாள். வெங்கு அண்ணாச்சியும் அவளின் சுதந்திரத்திற்கு தடையாக இல்லை. மகனை அவனது விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைக்கிறாள். அவள் எம்.ஜி.ஆர் -ஐ பார்க்க செல்லும் பகுதி குறிப்பிடத்தக்கது.  இந்த இரண்டு குடும்பங்களைப் பார்த்தல் அந்தஸ்தில் கீழே இருக்கும் குடும்பத்தில்தான் பெண்களுக்கு சுதந்திரம் அதிகம்.சாந்தாவின் பக்கத்து வீட்டு பாலம்மா இக்கதையின் மற்றொரு முக்கிய கதாப்பாத்திரம். கணவனை இழந்தவள். மிகவும் அழகானவள். இவள்தான் சாந்தாவிற்கு அனைத்தையும் எடுத்துக் சொல்கிறவள். அவளின் தனிமையும் காமமும் சாந்தாவிற்கு புரிந்தது.

நாடக கலையின் வீழ்ச்சியும் திரைப்படத்தின் வளர்ச்சியும் மிக அழகாக இக்கதையினூடே வெளிப்படுகிறது.நாவலில் ஒரு பக்கம் சமய சடங்குகள் , தீர்த்தயாத்திரை இருந்தால் அடுத்த பக்கம் materialistic வாழ்க்கை என்று மாறி மாறி வருகிறது.விதவிதமான மனிதர்கள் கதை முழுவதும் வந்துகொண்டே இருக்கிறார்கள்.அவர்களின் வாழ்க்கையும் நுணுக்கமாக சொல்லப்பட்டிருக்கிறது. குறிப்பாக திரவியத்தின் நண்பர்களின் கதைகள். கதையில் வரும் உணவு பண்டங்களின் விவரிப்பு வாயில் எச்சில் வர வைக்கிறது. அதுவும் போத்தி கடை சாப்பாடும் சாந்தாவின் பாயாசமும் மறக்க முடியாதது.  தமிழ் இலக்கியத்தில் மற்றொரு பெரும் படைப்பு வேனல்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

ரன்னிங் டைரி -78

07-03-2020 14:30
கிழக்கு கடற்கரை பூங்கா

மழை மேகம். வாக்மேனில் "மாசி மாசம்" ஆரம்பித்தது.  ஓட ஆரம்பித்தவுடன் ஹார்ஸ் மந்தர் (Harsh Mander)தான் நினைவில் வந்தார். அவருடைய பல கட்டுரைகளை நான் படித்திருக்கிறேன். தற்போது அவர் மேல்  இந்திய அரசு கேஸ் பதிவு செய்துள்ளது. பார்ப்போம். அப்படியே படித்து கொண்டிருக்கும் "கரமுண்டார் வூடு" நாவலின் கதை ஞாபகம் வந்தது. பெண்கள் இல்லையென்றால் குடும்பம் இல்லை. ஆனால் ஆண்கள் அவர்களை எப்போதும் புரிந்துகொள்வதே இல்லை. "Gardens By The Bay" பக்கமாக ஓடினேன். லேசாக மழை தூர ஆரம்பித்தது. மழை வேகமாக பெய்ய ஆரம்பிக்க முன் வீடு திரும்ப வேண்டுமென்று வேகமாக ஓட ஆரம்பித்தேன். மழைதான் எவ்வளவு மகிழ்ச்சியானது. மழையில் நனைந்து கொண்டே வீடை அடைந்தேன்.

Thursday, March 5, 2020

ரன்னிங் டைரி -77

05-03-2020 08:18
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

மழை மேகம். ஓட ஆரம்பித்தபோதே இந்தியாவின் புதிய அணு ஆயுதங்களான "Arihant-class" நீர்முழ்கி படை(Arihant class submarine fleet) மற்றும் அக்னி ஐந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை (Agni - 5 intercontinental ballistic missile) பற்றிதான் எண்ணத்தில் தோன்றியது.இந்த இரண்டு ஆயுதங்களின் விலை கிட்டத்தட்ட 14 பில்லியன் அமெரிக்க டாலர். இது தேவைதானா? ஏற்கனவே இருக்கும் பல அணு ஆயுதங்களே போதுமானதுதான். இந்தியாவிடம் கிட்டத்தட்ட 10 அக்னி-III (5000 கி மீ  செல்லக் கூடியது),16 அக்னி-II(2000 கி மீ  செல்லக் கூடியது) 20 அக்னி-I (குறுகிய தூரம்) மற்றும் 24 ப்ரித்வி-II (Prithvi-II) உள்ளது. அனைத்தும் பாக்கிஸ்தான் மற்றும் சீனாவை நோக்கியே நிறுத்தப்பட்டுள்ளது என்று படித்த ஞாபகம்.   இந்திய இராணுவத்தை நவீனமாக்க இந்த பணத்தை உபயோகித்தால் நன்றாக இருக்குமென்று நினைத்துக் கொண்டே அலுவலகத்தை அடைந்தேன்.

Wednesday, March 4, 2020

ரன்னிங் டைரி -76

04-03-2020 08:20
வீட்டிலிருந்து அலுவலகம்வரை

வாக்மேன் இல்லாமல் ஓடலாம் என்று முடிவு செய்து அப்படியே அது இல்லாமல் ஓடினேன். நல்ல வெய்யில். சீராக ஒரே வேகத்தில் ஓடினேன். வாசித்துக் கொண்டிருக்கும் "நான்காம் சுவர்"  புத்தகத்தில் வருபவர்கள் மனதில் வந்து கொண்டே இருந்தார்கள். அந்த மாதிரி பலரை நானும் பார்த்திருக்கிறேன். அலுவலகம் வரும் வரை வேறு எதையும் எண்ணவில்லை.