Wednesday, December 18, 2019

கடவுச்சீட்டு - வி.ஜீவகுமாரன்


வசித்து முடித்த இரவு தூக்கமில்லாமல்  என் மனதில் பலவகையான சிந்தனைகள். ஏனோ தெரியவில்லை இன்னும் தமிழ் மற்றும் சுபா  அவர்கள் இருவரின் குழந்தைகளைப் பற்றிய பயமும் கவலையும் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. பெரும் கனவு சிதைந்து மீண்டும் அகதிகளாக வீடு திரும்பும் காட்சி என்னை விட்டு அகலாமல் நினைவில் இருந்து கொண்டே இருக்கிறது .

வீட்டை எதிர்த்து காதல் திருமணம் செய்துகொண்டு இலங்கையை விட்டு டென்மார்க் செல்லும் தமிழ் மற்றும் சுபாவின் கதை இது. பாஸ்ப்போர்ட்டை கிழித்தெறிந்து விட்டு ஜெர்மனியில் வந்து இறக்கும் அவர்கள் முதலில் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள் அங்கிருந்து தப்பித்து பன்றி ஏற்றிச் செல்லும் வண்டியில் டென்மார்க்கை அடைகிறார்கள் அங்கும் அவர்கள் ஒரு அகதிகள் முகாமில் தங்கவைக்க படுகிறார்கள். அங்குதான் அவர்களின் இடம்பெயர்ந்த வாழ்க்கை தொடங்குகிறது.

தங்களின் படிப்பை முடிக்கிறார்கள்.குழந்தைகள் பிறக்கிறது. இரண்டு மகள்கள் ஒரு மகன். பெற்றோர்களும் அனைத்தையும் மறந்து தங்களின் பேரன் பேத்திகளுக்கு அனைத்தையும் சிறப்பாக செய்கிறார்கள். தங்கள் மறு வாழ்வின் முதல் அடி தங்களின் முதல் மகள் பதின் வயதில் கர்ப்பமானது. அதை அவர்கள் இருவராலும் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. அவர்களின் வாழ்க்கையையே மாற்றிவிடுகிறது.தமிழ் தன்மகளை முதன்முதலாக அடிக்கிறான் அதற்கு அவன் இழந்தது பெரிது. மகளை சிறுவர்கள் இல்லத்தில் சேர்கிறது அரசு.

சில வருடங்கள் கழித்து இரண்டாவது மகள் தனக்கு விருப்பமானவரை தனது பெற்றோர்கள் திருமணம் செய்ய தடையாக இருக்கிறார்கள் என்று போலீசில் புகார் செய்து அவர்களை விட்டுச் செல்கிறாள். மகன் மட்டுமே படித்து முடிக்கிறான். அவனிடம் தனக்கு விருப்பமான வாழ்க்கையை வாழ் என்று சொல்லிவிட்டு மீண்டும் இலங்கைக்கே செல்கிறார்கள். அங்கு சென்று இறங்கியவுடன் தமிழ் இருவரின் பாஸ்ப்போர்ட்டையும் கிழித்தெறிவதோடு கதை முடிகிறது .

புலம்பெயர் வாழ்க்கையின் இன்ப துன்பங்களை நேர்த்தியாக பதிவு செய்துள்ளார் ஜீவகுமாரன். தமிழர்கள் எங்கு சென்றாலும் சாதியையும் கொண்டு செல்கிறார்கள். அதையும் ஆசிரியர் சுட்டிக் காட்டுகிறார். கலாச்சார வித்யாசங்கள் எப்படி இரு தலைமுறைகளை பாதிக்கின்றன என்பதை மிக தெளிவாக எடுத்துக்காட்டுகிறார் ஜீவகுமாரன். வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் குடும்பங்களுக்கு இது பெரிய பிரச்சன்னை.  பிள்ளைகளை பதின் வயதில் ஊருக்கு அனுப்புவதா வேண்டாமா என்ற கேள்வியுடன் பெற்றோர்கள் பேசுவதை நான் இங்கு சிங்கப்பூரில் பல குடும்பங்களில் பார்த்திருக்கிறேன். மிகவும் கடினமான முடிவுகளில் ஒன்று.

வாசிப்பதற்கு தடையில்லா மொழிநடை.பெரிதும் இலங்கை தமிழ் இல்லாதது என்  போன்ற வாசர்களுக்கு வாசிப்பை எளிதாக்கியது. வாசிக்க வேண்டிய புத்தகம் .

No comments:

Post a Comment

welcome your comments