Wednesday, February 13, 2019

ரோமா


சமீபத்தில் நான் பார்த்த படங்களில் மிகச் சிறந்தப் படம் இதுதான். படம் பார்த்து மூன்று வாரங்களுக்கு மேல் இந்த படத்தின் பல காட்சிகள் என்னுள் மீண்டும் மீண்டும் ஓடிக்கொண்டே இருக்கிறது. இந்த கதை  இயக்குநர் அலோன்ஸோ cuaron-னின்  வாழ்க்கையைத் தழுவியது . இவர் ஆஸ்கார் விருது பெற்றவர்.

கதை 1970-ல் மெக்ஸிகோவில் நடக்கிறது. அது மெக்ஸிகோவின் இருண்ட காலம். மக்களிடையே ஒரு விதமான பதட்டம் எப்போது என்ன நடக்குமென்று. மாணவர்களின் போராட்டத்தை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கிக்கொண்டிருந்தது. அந்த வருடத்தின் கால்பந்து உலகக்கோப்பையின் போஸ்டர்கள் அறையில் தெரிகின்றது. இந்த படத்தின் பெயர் ரோமா என்பது முந்தை காலனிய ரோமா மாவட்டத்தைக் குறிக்கிறது.

கிளியோ (Cleo) மிஸ்ட்டக்கோ இனத்தை சேர்ந்தவள். அவள் ஒரு மத்திய மேல்தட்டு குடும்பத்தில் பணிப்பெண்ணாக வேலை செய்கிறாள். அவள் வேலை துணிதுவைப்பதும் நாய்களை பார்த்துக்கொள்வதும் . அந்த குடும்பத்து குழந்தைகள் அவள் மேல் பாசமாக இருக்கிறார்கள் அவளும் தான்.எல்லாம் நன்றாக போய்க்கொண்டிருந்தபோது அவள் கர்ப்பமாகிறாள். அவளது காதலனை தேடுகிறாள் ஆனால் அவனோ போராட்டத்தில் பங்கேற்கிறான். கிளியோ தனித்து விடப்படுகிறாள் ஆனால் அந்த குடும்பம் அவளை நல்ல முறையில் பார்த்துக் கொள்கிறது.

மற்றொரு பக்கம் அக்குடும்பத்தலைவி சோபியாவின்  மனப் போராட்டம் - அவளது கணவன் அன்டோனியோ கியூபெக் செல்வதாகச் சொல்லி அங்கே மெக்ஸிக்கோவிலேயே மற்றொரு பெண்ணுடன் வாழ்கிறான். கிளியோ மற்றும் சோபியாவின் வாழ்க்கை ஒரே நேரத்தில் வேறு விதமாக மாறுகிறது.அவர்களுக்கிடையே நடக்கும் அந்த ஒரு வரி வசனம் மிகவும் முக்கியமானது. படத்தில் கிளியோ மிகச்  சில இடங்களில்தான் பேசுகிறாள். ஏன் அப்படி?  ஏன் அவளுடைய குடும்பத்தைப் பற்றி ஒன்றும் சொல்லப்படவில்லை? இப்படி பல கேள்விகளுக்கு விடை இல்லை.

மேலே கூறியது போல இது இயக்குநரின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டது . கிளியோ யாருமல்ல இயக்குநரின் செவிலித்தாய். அவரின் உண்மையான பெயர் லிபோரியா ரோட்ரிகெஸ் (Liboria Rodriguez). அலோன்ஸோ ஒன்பது மாதக் குழந்தையாக  இருந்தபோது லிபோரியா அங்கு வேலைக்கு வருகிறாள். படப்பிடிப்பைப் பார்க்க வந்த லிபோரியா பல தடவை அழுத்ததாக அலோன்ஸோ ஒரு பேட்டியில் கூறியுள்ளார் . படத்தின் கதையை நடிகர்களிடம் கூட அலோன்ஸோ சொல்லவில்லை அன்றன்றைக்குத் தேவையான வசனங்களை மட்டும்தான் சொன்னாராம்.

படத்தில் அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர் அதிலும் குறிப்பாக கிளியோவாக நடித்த புதுமுக நடிகை Yalitza Aparicio. அந்த முகத்தை மறக்கவே முடியாது அதும் அந்த கடலில் குழந்தையைத்  தேடும்போது .கதையில் பெரிதாக ஏதுமில்லை. ஆனால் அதை எடுத்த விதம்தான் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. படம் முழுவதும் கறுப்பு வெள்ளையில். அதுவே ஒரு mesmerising effect-ஐ கொடுக்கிறது. ஒவ்வொரு frame-லும் அனைத்தும் (மனிதர்களும் பொருட்களும்) துல்லியமாக உள்ளது .Long takes லாம் பலதடவை பயிற்சி செய்து எடுத்துள்ளனர்.ஒளிப்பதிவும் இயக்கமுமு அலோன்ஸோ தான்.படம் மெதுவாக நகர்ந்தாலும் அழுத்தம் குறையாமல் இறுதிவரை செல்கிறது.

அவசியம் பார்க்க வேண்டிய படம்.

No comments:

Post a Comment

welcome your comments