Tuesday, July 31, 2018

வேள்வித் தீ - எம்.வி . வெங்கட்ராம்


"ஒரு மின்னலோ இடியோ இல்லை; இருக்கத் தேவை இல்லாதவற்றை இடித்துத் தள்ளுவதற்காகப் பூமியுடன் செய்துகொண்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றுவதைப் போல் மழை அடர்த்தியாகவும் கனமாகவும் மிக நிதானமாகவும் பெய்து கொண்டிருந்தது."  - இப்படித்தான் இந்த கதை தொடங்குகிறது.

இந்தக் கதை சௌராஷ்டிரா சமூகத்தில் நடக்கிறது. கண்ணன் ஒரு பட்டு நெசவாளி. குடும்பச் சூழ்நிலை காரணமாக படிப்பை நிறுத்திவிட்டு நெசவுக்கு வருகிறான். தந்தை இறந்தப் பின் தாயுடன் தனிக்குடித்தனம் செல்கிறான். படிப்படியாக முன்னேறி சொந்த தறி வைக்கும் அளவுக்கு முன்னேறுகிறான்.கௌசல்யா என்ற பெண்ணை திருமணம் முடிகிறான். அவனது வாழ்வு நான்றாகதான் சென்று கொண்டிருந்தது ஹேமா என்ற பணக்கார விதவைப் பெண் வரும் வரை.

கண்ணன் மற்றும் அவனின் சகோதரர்களின் உறவு பொருளியல் சார்ந்தது. கண்ணனின் வளர்ச்சியில் அவர்கள் மகிழ்ச்சி அடையவில்லை. அவர்களின் அம்மா இறந்த பிறகு நடக்கும் சொத்துச் சண்டையே அதற்கு உதாரணம். மிக நுட்பமாக  உறவுகளால்  ஏற்படும் உளவியல் பிரச்சன்னைகளை ஆசிரியர் எடுத்துக்கூறுகிறார்.கண்ணனுக்கும் அவனது தாயாருக்கும் இடையேயான நட்பு ஒரு காலகட்டத்தில் சிதையுறுகிறது. அதற்கு காரணம் தனது ஒரே மகளை தன் மகன் சரியாக கவனிக்கவில்லையென்று அவள் எண்ணுகிறாள். ஆனால் கண்ணன் தன்னால் முடிந்ததை செய்துகொண்டுதான் இருந்தான்.

கண்ணன் மற்றும் கௌசல்யாவின் உறவு ஒரு நல்ல கணவன்-மனைவி உறவு. கௌசல்யா கணவனின் வருமானத்தில் குடும்பத்தை சிறப்பாவாகவே நடத்தி வந்தாள். தறி வேலைகளிலும் தன்னால் முடிந்ததை செய்து வந்தாள். ஹேமா கௌசல்யாவுடன் மிகவும் நெருக்கமாக பழகுகிறாள். இந்த இரு பெண்களுக்கிடையே உள்ள நட்பை ஆசிரியர் மிகவும் எதார்த்தமாக கூறியுள்ளார்.  நம்மால் அடுத்து கதையில் என்ன நடக்கும் என்பதை எளிதாக யூகிக்க  முடிகிறது - இறுதி முடிவைத் தவிர.

கண்ணன் கௌசல்யா மற்றும் ஹேமாவிற்கு இடையே உள்ள உறவுதான் கதையின் மைய்யப் புள்ளி. கௌசல்யாவிடம் அனைத்தும் இருந்தும் கண்ணன் ஹேமாவிடம் உறவு கொள்கிறான். அவனே அதை எதிர்பார்க்கவில்லை. அனைத்தையும் இழக்கிறான். அவன் ஏன் ஹேமாவிடம் காமம் கொண்டான் ? மனித மனதின் புரியாத புதிர் இது. ஹேமாவை நாம் புரிந்து கொள்ளமுடியும் ஏனென்றால் அவள் வயது மற்றும் சூழ்நிலை அப்படி.  அவள் உடலின் தேவையும் கூட.

கண்ணன் மற்றும் சாரநாதன் உறவு எதார்த்தமானது. கண்ணன் சாரநாதனை நன்றாகத்தான் நடத்துகிறான். இருந்தும் இருவருக்கும் இடையே ஒருவிதமான இடைவெளி இருந்துகொண்டேயிருக்கிறது.இந்த கதை உறவுகளை பற்றியது. எவ்வாறு உறவுகள் தனி மனிதனின் வாழ்க்கையில் இன்றியமையாது என்பதை இதைவிட சிறப்பாக சொல்வது கடினம்தான். ஒருவனால் அனைத்து சொந்தங்களையும் எப்போதும் ஒரேபோல கையாள்வது கடினம் அதை கண்ணன் படிப்படியாக அறிந்து கொள்கிறான்.

சௌராஷ்டிரா சமூகத்தின் வாழ்க்கையை மிக அழகாக பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர். நெசவு தொழில் உள்ள சிக்கல்களையும்  பிரச்சனைகளையும் அவர்களை பெரும் முதலாளிகள் அடிமைகள் போல நடத்துவதையும் படிக்க வேதனையாக உள்ளது. இந்த கதை தலைமுறைகளுக்கு முன்னாள் நடந்தாலும் இன்னும் இம்மக்கள் அப்படிதான் கஷ்டப்படுகிறார்கள்.

அவசியம் படிக்க வேண்டிய புத்தகம்.

No comments:

Post a Comment

welcome your comments