எதார்தமாகத்தான் இந்தப் புத்தகத்தை நூலகத்தில் பார்த்தேன். எழுத்தாளர் பெயர் எங்க ஊர் பெயர் .உடனே எடுத்து படிக்க ஆரம்பித்தேன். மொத்தமே 136 பக்கங்கள்தான் , ஒரே முனைப்பில் படித்து முடித்தேன்.
பிரவீன் ஒரு கப்பல் மாலுமி .பல வருடங்களுக்குப் பிறகு வீட்டிற்கு திரும்பி வருகிறான் . அவன் குடும்பம் வசிக்கும் இடம்தான் பதினாறாம் காம்பவுண்ட். இந்த காம்பவுன்ட்டில் வசிக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒவ்வொரு கதை. பிரவீனுக்கு எல்லாமே அவனின் ஆச்சி தான். பிரவீனுக்கும் அவனது மாமன் மகள் ஸ்வீட்டிக்கும் காதல் ஏற்படுகிறது. குடும்பமும் அதற்கு ஒத்துக்கொள்கிறது. கதையின் முடிவை நான் ஓரளவு கணித்துவிட்டேன். ஏனென்றால் கதையில் வரும் சம்பவங்கள் நான் எங்கள் ஊரில் கேள்விப்பட்டதுதான்.
கதையில் இரண்டு கதாப்பாத்திரங்கள் என்னை மிகவும் கவர்ந்தது. முதலாவது பிரவீனின் ஆச்சி ஜொஸி. எங்கள் ஊரின் அநேகமாக அனைத்து அம்மச்சிகளும் அப்பத்தாக்களும் அப்படித்தான் இருப்பார்கள் .
"தேவமரியாளுக்கு அருளை வழங்குவதும் ,அவளிடமே கருணைக்கு இறைஞ்சுவதுமாய் .. இடையிடையே பரலோகப் பிதாவையும் ஒருவழி செய்வதுமாய் ஜெபமாலை சொல்லி முடிப்பாள் .."
பேரன் வருகிறான் என்றதும் அவள் செய்யும் செயல்களை பலமுறை நான் எங்கள் வீடுகளில் பார்த்திருக்கிறேன்.மிகவும் எதார்த்தமான பாத்திரப் படைப்பு . இரண்டாவது கதாபாத்திரம் தூத்துக்குடி. ஆம் இந்த கதையில் தூத்துகுடியும் ஒரு கதாப்பாத்திரம்தான். தூத்துக்குடியை இவ்வளவு உயிரோடு யாரும் ஒரு நாவலில் எழுதி இதுவரை நான் படித்ததில்லை. அனைத்து முக்கியமான இடங்களும் கதையில் வருகிறது. அனைத்தும் நான் நடந்து திரிந்த இடங்கள். கதையில் வரும் ஆல்டர் பாய்ஸ்(Alter Boys ) பற்றிய சம்பவங்கள் பல சர்ச்களில் நடப்பதுதான். அந்த உடையை போடறதுக்கு நடக்கும் சண்டைகள் மறக்க முடியாதது . எனக்கு அனுபவம் உள்ளது.
காத்திருப்பு வருகை மற்றும் இறப்பு - இவை மூன்றும்தான் இந்த கதையின் மைய்யப் பொருள் .ஒவ்வொன்றும் ஒரு செய்தியைச் சொல்லி செல்கிறது. கதையினூடே பல விசயங்களை சொல்லிச்செல்கிறார் ஆசிரியர். கிறிஸ்தவர்களுக்கிடையே உள்ள பாகுபாடுகள் மற்றும் பரதவர்களின் வரலாற்றை மிக சுருக்கமாக சொல்லிருக்கிறார்.ஒவ்வொரு அத்தியாயமும் தேதியோடு தொடங்குவதால் ஒருவிதமான பதற்றத்தை உண்டாக்குகிறது எளிய நடை அதை மேலும் ஸ்வாரஸ்யமாக்குகிறது.
வாசிப்போம் !
ஆஹா... நன்றி தோழா..
ReplyDeleteஅருமை தோழர்
ReplyDelete