Guylain Vignolles -இவன்தான் இந்த கதையின் நாயகன் . தினம்தோறும் சரியாக 6:27 வண்டியில் அவனுக்கென்று அமைந்த சீட்டில் உட்கார்ந்து கொண்டு தன் பையிலிருந்து ஒரு தாளை எடுத்து வாசிப்பான் . அவன் வாசிக்கும் போது யாரும் எதுவும் பேசமாட்டார்கள். ஒருநாள் வாசித்ததற்கும் அடுத்தநாள் வாசித்ததற்கும் சம்பந்தமே இருக்காது. பல வருடங்களாக அவன் அதை செய்து வருகிறான் .அச்செயலை அவன் வாழ்வின் ஒரு பகுதியாகவே பார்க்கிறான்.ஆனால் அவன் செய்யும் வேலையோ புத்தகங்களை கூழாக மாற்றும் இயந்திரத்தை இயக்குவது. அவனுக்கு அந்த வேலையில் சிறிதும் மனமில்லை இருந்தாலும் சூழ்நிலை காரணமாக அதை செய்தாகவேண்டும். அவன் அந்த இயந்திரத்தை 'பொருள்' (The Thing) என்றுதான் அழைக்கிறான். அதைப் பற்றி பேசும்போதெல்லாம் அவனுள் ஒரு அருவருப்பு உண்டாகுகிறது. இயந்திரத்தில் இருந்து தப்பிய தாள்களை பத்திரமாக யாருக்கும் தெரியாமல் சேகரித்து வீட்டுக்கு கொண்டு செல்வான். அதைத்தான் தினமும் ரயிலில் வாசிப்பான் .
அவனது வீட்டில் அவனைத் தவிர ஒரு தங்கமீன் மட்டுமே உள்ளது. அவன் அம்மாவிடம் தனது வேலையைப் பற்றி பொய்ச்சொல்லி காலத்தை கடத்திக்கொண்டிருக்கிறான். அவனது வாழ்க்கை ஒரே பாதையில் பயணித்துவந்தது ஆனால் அனைத்தும் ஒரு USB drive மூலம் மாறியது . அதில் ஒரு இளம் பெண்ணின் டைரிகுறிப்புகள் 72 பாகங்களாக இருந்தது . Guylain Vignolles அதை ஒரே இரவில் படித்து முடிக்கிறான் . அந்த பெண்ணின் மீது காதல் கொள்கிறான் .அவளைத் தேடுகிறான் . அவளை கண்டடைந்தானா இல்லையா என்பதே முடிவு .
அந்த பெண்ணின் பெயர் ஜூலி .அவள் கழிப்பறை சுத்தம் செய்பவள். தனது prince charming -காக காத்துக்கொண்டிருப்பவள். அவள் தனது வேலையை பற்றி விவரிப்பது மிகவும் அழகு. அவளது ஆண்டி (aunty) கூறும் அறிவுரைகளாக அவள் சொல்லும் வாக்கியங்கள் கதைக்கு மிகவும் பொருத்தம் . அவளுக்கு எந்த மாதிரி ஆண் தேவை என்பதில் மிகவும் தெளிவாக இருக்கிறாள் . இந்த கதையில் வரும் மற்ற பெண்கள் அனைவருமே வயதானவர்கள் . அவர்களும் ஒரு சராசரியான வாழ்க்கை வாழ்பவர்கள் .
ஒரு பக்கம் இந்த புத்தகம் சாதாரண மக்களின் வாழ்க்கையை மிக சிறப்பாக பிரதிபலிக்கிறது . மற்றொரு பக்கம் இந்த மாதிரி வாழ்க்கையை நம்ப முடியாத அளவிற்கு ஆசிரியர் கூறுகிறாரா என்ற கேள்வியும் எழத்தான் செய்கிறது ஏனென்றால் கால்களை இழந்தவன் அது மீண்டும் வளரும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான் மற்றொருவனோ "orator" -ஆக வேண்டுமென்று ஆசைப்படுகிறான் இப்படி இன்னும் சில கதாப்பாத்திரங்கள் . இந்த புத்தகத்தின் பெரிய பலம் எழுத்தின் பலத்தை மிகவும் அழகாக எடுத்துரைப்பது . புத்தகங்கள் எவ்வாறு ஒருவனின் வாழ்க்கையை மாற்றும் என்பதற்கு இக்கதை ஒரு எடுத்துக்காட்டு .
இந்த புத்தகம் ஆசிரியருக்கு முதல் புத்தகம் . மிகவும் தெளிவான எழுத்துநடை எந்த சிரமமும் இல்லாமல் படிக்கலாம் . ஒரு "feel good " புத்தகத்தைப் படித்த உணர்வு .
No comments:
Post a Comment
welcome your comments