விரும்பினதை விட்டால் பாவம். விரும்பாததைத் தொட்டால் பாவம்.இந்த புத்தகத்தைப் படித்து முடித்தவுடன் தோன்றியது வணிகத் தன்மைகொண்ட எழுத்து. அணிந்துரையில் திரு.அப்பணசாமி கூறுவதுபோல சரவணன் சந்திரன் ஒரு தமிழ் சேட்டன் பகத். வாசிக்க தடையில்லை. கதைக்களம் மிகப்பெரியது ஆசிரியர் அதை சரியாக பயன்படுத்தவில்லை என்றுதான் எனக்கு படுகிறது. நான் இவரது இரண்டாவது புத்தகமான "ஐந்து முதலைகளின் கதை " படித்துள்ளேன். அக்கதை பிடித்திருந்தது அப்போது அந்த எழுத்துநடை பெரிதாக என்னை பாதிக்கவில்லை .
எதிர்பார்த்து இருந்ததற்கு மாறாகப் பெருந்தன்மையுடன் இருப்பதும் பழி வாங்கும் உணர்ச்சிதான்எனக்கு அஜ்வா பேரிச்சம்பழம் 2015-ல் தான் தெரியும். ரம்ஜான் மார்க்கெட்டில் ஒரு ஈரானியர் விற்றுக்கொண்டிருந்தார். அங்கிருந்த பேரீச்சம்பளங்களிலேயே மிகவும் விலை உயர்ந்தது அஜ்வா வகை பேரீச்சம்பளங்கள்தான். அவரிடம் கேட்டதற்கு ஒரு கதையை சொன்னார். நான் அந்த பழங்களை வாங்கவில்லை ஆனால் மற்ற விலைகுறைந்த பழங்களை வாங்கியவுடன் ஒரே ஒரு அஜ்வா பழம் தந்தார். அருமையான சுவை. காலையில் ஏழு அஜ்வா பழங்கள் சாப்பிட்டால் மாலைவரை விஷம் மற்றும் மாந்த்ரீகம் ஒருவனை ஒன்றும் செய்யாது என்பது ஒரு நம்பிக்கை.
ஒரே நேரத்தில் ஒன்றைப் பற்றி மட்டுமே சிந்திக்க முடியும். அப்படி ஒரு விஷயத்தைப் பற்றி மட்டுமே திரும்பத் திரும்ப சிந்திப்பவர்களைப் பைத்தியம் என்று வழக்கமாக இந்த உலகம் சொல்கிறது.ஒரு வரியில் இக்கதையை சொல்லவேண்டுமானால் எப்படி ஒருவன் போதையில் இருந்து வெளிவருகிறான் என்பதுதான் .கதைசொல்லிதான் கதையின் நாயகன் அவனது பார்வையில்தான் கதை விரிகிறது.அவனது தந்தை எப்படி எதற்கும் பயப்படுபவராக இருந்தாரோ அதேபோல அவனும் அனைத்திற்கும் பயப்படுகிறான். அட்டையில் "பயத்திலிருந்து எது விடுவிக்கிறதோ அதுதான் தெய்வம்" என்று எழுதப்பட்டுள்ளது அதுபோல நாயகன் எவ்வாறு தனது அனுபவங்களோடு பயத்திலிருந்து வெளிவருகிறான் என்பதுதான் கதை. அவனது குடும்பம் ஒரு அன்பான குடும்பமாகவே சித்தரிக்கப்பட்டுள்ளது. அவனது அத்தையின் கதைதான் சுவாரசியமான ஒன்று. அவனது மாமன்தான் அவர்கள் குடும்பத்து எதிரி. ஒரு தடவை மாமன் அவனை திருக்கை வாலால் அடிக்கிறான்.அது அவனது மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது.
குடிபழக்கத்திற்கும் போதை மருந்து பழக்கத்திற்கும் உள்ள வித்தியாசத்தை ஆசிரியர் எளிமையாக விளக்குகிறார்.அவர்கள் குடும்பத்திற்குள்ளும் வெளியேயும் இருக்கிறார்கள். மாமாவை தவிர அவனை சுற்றி அனைவரும் அன்பானவர்களாக இருக்கிறார்கள் ஜார்ஜ் அந்தோணி மற்றும் அவனது அம்மா விஜி அண்ணன் ,சுந்தர் சிங் அண்ணன்... மற்றும் டெய்சி. அவன் தன் பயத்திலிருந்து வெளிவர இந்த போதையுலகிற்குள் நுழைகிறான்.
ஒவ்வொரு அத்தியாயமும் ஒரு சிறுகதைபோல எழுதப்பட்டுள்ளது.கதையில் வரும் ஒவ்வொருவரும் ஒரு அனுபவத்தை சொல்லிச் செல்கிறார்கள். டெய்சி உறவுகளால் தன் சுதந்திரம் பறிபோய்விடும் என்று பயந்து வீட்டைவிட்டு வெளியேறி போதை உலகில் தஞ்சம் அடைகிறாள் .
இந்த கதையை சற்று வித்தியாசமாக்கியது போதை உலகின் அனைத்து சமாச்சாரங்களையும் நமக்கு காட்டுவதுதான்.ராஜபோதை ,காரின் கதவுகளை அடைத்துக்கொண்டு எடுத்துக்கொள்ளும் போதைப்பொருள் வெவ்வேறு உறுப்புகளில் குத்திக்கொள்ளும் பழக்கம் என அனைத்தையும் கதையோடு பேசிச் செல்கிறார் . போதைக்கு அடிமையானவர்களின் பாலுணர்வு எப்படி இருக்கும் என்று நாயகன் கூறுவது எனக்கு தெரிந்து உண்மைதான் . அவர்கள் ஒருபோதும் ஆண்மையை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். கதையில் இறப்பு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது . டெய்சியின் இறப்பு அவனை பெரிதும் பாதிக்கிறது . அதுவே அவனை போதையிலிருந்து மீள தூண்டுகிறது. அஜ்வா செடி துளிர்விடுவதுடன் கதை முடிகிறது.
சாரு நிவேதிதாவின் தாக்கம் சரவணன் சந்திரனிடம் உள்ளது என்பது அவரது இரண்டாவது நாவலிலே தெரிந்தது இதிலும் அப்படியே. ஒரு முக்கிய வித்யாசம் சரவணன் சந்திரன் ஒரு முடிவை நோக்கி கதையை நகர்த்துகிறார். பல்வேறு மதங்களின் மாந்தர்கள் வருகிறார்கள் அனைவரையும் மிக அழகாக ஆசிரியர் கையாண்டுள்ளார் . இந்த புத்தகத்தின் பெரிய குறை எதுவுமே என் மனதில் நிற்கவில்லை அதற்கு எழுத்துநடை ஒரு காரணமாக இருக்கலாம். அனைத்தையும் மிக எளிதாக கடந்து செல்ல முடிகிறது . திரைப்படங்களில் வருவதுபோல பல வசனங்கள் அங்கும் இங்குமாக வருகிறது. இக்கதையில் அனைவரும் ஒரு பயத்துடன் வருகிறார்கள் - அதுதானே வாழ்க்கை . பயம் இல்லாதவர் இவ்வுலகில் யார் ?
வாசிக்க வேண்டிய புத்தகம் .
நல்ல பதிவு. கருத்த பதிவில் சிந்தனை ஓட்டம சீராக இருந்தால இன்னும் சிறப்பாக இருக்கும்.
ReplyDeleteவிமர்சனம் அருமை.. கதையை முற்றிலும் சொல்லாமல் சொன்னது.. நான் இன்னும் "ஐந்து முதலைகளின் கதை "-யே படிக்கலை :(
ReplyDelete