பிரமிள்
ககனப் பறவை
நீட்டும் அலகு
கதிரோன் நிலத்தில்
எறியும் பார்வை
கடலுள் வழியும்
அமிர்தத் தாரை
கடவுள் ஊன்றும்
செங்கோல்
பார்த்த இடமெங்கும்
கண்குளிரும்
பொன் மணல்.
நடக்கும்
இடத்தில் மட்டும்
நிழல் தேடி
என்னோடு அலைந்து
எரிகிறது
ஒரு பிடி நிலம்.
நாளை புரட்சி
வயிற்றில் குடியிருந்து
வாழ்ந்து பசிக்கிறது
நிகழ்காலம்
பசியில் அடைத்த
காதிலும் விழுகிறது
‘நாளை புரட்சி
சரித்திரம் நமது கட்சி’
என்றென்
பசியைக் கூட
ஜீரணிக்க முயற்சிக்கும்
ஏப்பக் குரல்கள்.
ஆனால்,
நாளைகள் ஒவ்வொன்றும்
நாள்தோறும் நேற்றாக
தன்பாட்டில் போகிறது
தான்தோன்றி சரித்திரம்.
ஜ்யோவ்ராம் சுந்தர்
இலக்கு
இருளால் மூடப் பட்டிருக்கிறது சாலை
தவளைகளின் இரைச்சல்
நரம்புகளை ஊடுருவுகிறது
குடைகளை மீறி மனிதர்களைச்
சில்லென்று ஸ்பரிசிக்கிறது மழை
செடிகளும் மரங்களும் பேயாட்டம் போடுகின்றன
மின்னல் வழிகாட்டுகிறது உற்ற தோழனாய்
குறுக்கே மல்லாந்த மரங்களை
அப்புறப் படுத்தி
இலக்கை நோக்கிச் சக பயணிகள்
வேகமாக முன்னேறிச் செல்கின்றனர்
மழையையும்
இருட் சாலை அழகையும்பார்த்தபடி நின்று கொண்டிருக்கிறேன்
நரன் கவிதைகள்
தார்ச்சாலைகள் வெண்நிறக்கோடுகள்
வனங்களின் நடுவே
போடப்பட்ட தார்ச்சாலைகள்
அவற்றின் நடுவே
வலப்புறத்தையும்
இடப்புறத்தையும்
பிரித்துச் செல்லும்
வெண்நிறக் கோடுகள்
எப்போதும் அவற்றின் மேலேறி நடந்து செல்கின்றன
சில வரிக்குதிரைகள்
வரிக்குதிரைகளின் மேலேறிச் செல்கின்றன சில
தார்ச்சாலைகள் சில வெண்நிறக் கோடுகள்
No comments:
Post a Comment
welcome your comments